தமிழகம்

கடைசி நாளில் அலைமோதிய கூட்டம்: திமுகவினர் 8,000 பேர் விருப்ப மனு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து கடந்த ஜனவரி 14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம் வரை 5,500 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

கடைசி நாளான நேற்று விருப்ப மனு அளிக்க ஆயிரக்கணக்கான திமுகவினர் திரண்டனர். இதனால், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

அனைத்து பொது தொகுதிகளிலும் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டா லின் போட்டியிட வேண்டி, ஆயிரக்கணக்கான திமுகவினர் மனு அளித்துள்ளனர். திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, ஸ்டாலின் மகன் உதயநிதிக்காகவும் சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். திருவாரூர், கொளத்தூர் தொகுதிகளில் வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை.

முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் எம்.பி., எம்எல்ஏக்கள், தலைமை, மாவட்ட, மாநகர செயலாளர்கள் என 2,500-க் கும் அதிகமானோர் கடைசி நாளான நேற்று மனு தாக்கல் செய்துள்ளதாக திமுக அலுவலக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர். இதுபற்றிய விவரங்கள் பிறகு வெளியிடப்படும். விருப்ப மனு வாங்கியவர்கள் வியாழக்கிழமையும் தாக்கல் செய்யலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT