அமைச்சர் சேகர் பாபு நெல்லையப்பர் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். 
தமிழகம்

அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

அ.அருள்தாசன்

இந்து சமய அறநிலையத் துறையில் எந்தப் பணியும் கடந்த ஆட்சியில் நடக்காமல், அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் உள்ளது. அனைத்துப் பணிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ளட்ட பல்வேறு கோயில்களில் இன்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழகத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தொன்மை வாய்ந்த கோயில்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிதிலமடைந்துள்ள மண்டபத்தில் திருப்பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இங்குள்ள கருமாரி தெப்பத்தை முழுமையாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நவக்கிரஹ சந்திரன் சிலை சீரமைக்கப்படும்.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். கோயிலில் வெள்ளித் தேர் புனரமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளில் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதிக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்று வந்த மூலிகை தைலக் காப்பு வைபவம் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை என்று தெரியவந்தது. அதை உடனே நடத்த அறநிலையத் துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்படும். கோயில்களின் சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். இந்து சமய அறநிலையத்துறையில் எந்தப் பணியும் கடந்த ஆட்சியில் நடக்காமல், அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் உள்ளது. அனைத்துப் பணிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுபரன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அப்துல் வகாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயிலின் உப கோயிலான அருள்மிகு கோடிலிங்கேஸ்வரர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில் ஆகிய இடங்களிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT