`காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததன் மூலம் மன்னிக்க முடியாத குற்றத்தை திமுக செய் துள்ளது’ என்று, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாகர்கோயில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
`மக்கள் நலக் கூட்டணி பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டதாகவும், பிரச்சாரத்துக்கு செல்லும்போது மக்கள் வெள்ளத்தில் மிதந்துச் செல்வதாகவும் வைகோ கூறியுள்ளார். அவர்கள் ஒருவரின் கையை ஒருவர் பிடித்தபடி செல்கிறார்கள் கையை விட்டால் எங்கே ஓடிப்போய் விடுவார்களோ? தெரியாது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே மக்கள் நலக் கூட்டணி காலாவதியாகி விடும்.
குடும்ப விவகாரம்
கருணாநிதி அழகிரி இடையேயான பிரச்சினை குறித்து கருத்துச் சொல்ல விரும்ப வில்லை. அது அவர்களின் குடும்ப விவகாரம். காங்கிரஸ் திமுக கூட்டணி பற்றி கருத்துச் சொன்ன மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `இரண்டு பூஜ்ஜியங்கள் ஒன்று சேர்ந்துள்ளன’ என்று கூறியுள்ளார். அவரது கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.
காங்கிரஸ் மன்னிக்க முடியாத தவறை செய்துவிட்டதாக முன்பு கூறிய திமுக, இப்போது காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்துள் ளது. இதன் மூலம் இப்போது திமுக மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்துள்ளது’என்றார் அவர்.