தமிழகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி: பதக்கம் வெல்வோம் என்ற உறுதியுடன் தடகளத்தில் தடம் பதிக்கும் தமிழக வீரர், வீராங்கனைகள்

செய்திப்பிரிவு

திருச்சி/மதுரை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய தடகள தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் திருச்சியைச் சேர்ந்தஒரு வீரர், 2 வீராங்கனைகள், மதுரையைச்சேர்ந்த ஒரு வீராங்கனை, கமுதியைச் சேர்ந்த ஒரு வீரர் என தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பிடித்துள்ளனர். முழு திறனையும் வெளிப்படுத்தி நிச்சயம்பதக்கம் வெல்வோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டியில், தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் (ஆண்கள் 4x400 தொடர் ஓட்டம்), ரேவதி வீரமணி (கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டம்), தனலட்சுமி சேகர் (கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டம்), சுபா வெங்கடேசன் (கலப்பு 4x400மீ தொடர் ஓட்டம்), நாகநாதன் பாண்டி (ஆண்கள் 4x400 தொடர் ஓட்டம்) ஆகிய 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரோக்கிய ராஜீவ்,தனலெட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் ஆகியோர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ரேவதி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாகநாதன், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர். இவர்கள் தற்போது, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் தேசிய பயிற்சி மையத்தில் தங்கி, தடகளப் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

2-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பு

ராணுவ வீரரான ஆரோக்கிய ராஜீவ் லால்குடியைச் சேர்ந்தவர். அர்ஜூனா விருது பெற்ற இவர், 3 முறை ஆசியப் போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளார். கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஒலிம்பிக்போட்டிக்கான ஆண்கள் தொடர் ஓட்டத்துக்கு சிறந்த அணி அமைந்துள்ளது. எனவே, இம்முறை பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன’’ என்றார்.

தாயின் கனவை நிறைவேற்றிய மகள்

திருச்சியை அடுத்த குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் - உஷா தம்பதியின் மகள் தனலட்சுமி. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் 100 மீ ஓட்ட தூரத்தை 11.39 விநாடிகளில் கடந்து,இந்தியாவின் முன்னணி வீராங்கனையான டூட்டி சந்தை முந்தினார். இதேபோல 200 மீ ஓட்டத்தில் போட்டி தூரத்தை 23.26 விநாடிகளில் கடந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்தார்.

தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளது குறித்து அவர் கூறும்போது, ‘‘என்னை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கக்கூடிய ஒரு தடகள வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்பதில் எனது அம்மா உறுதியாக இருந்தார்.அவரின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது. நிச்சயம் இப்போட்டியில் பதக்கம் வெல்வேன்’’ என்றார்.

தாத்தா விதைத்த ஊக்கம்

திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பகவதிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன்- பூங்கொடி தம்பதியினரின் மகள் சுபா. சர்வதேச போட்டிகளில் 3 முறையும், தேசிய அளவிலான போட்டிகளில் 20 முறையும் வெற்றி பெற்றுள்ளஇவர், முதல்முறையாக தற்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது தாத்தா சங்கிலிமுத்து, காவல்துறையில் பணியாற்றியதால், அவர்தான்எனக்குள் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஊக்கத்தை விதைத்தார். சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று, அதில் 3 போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ளேன். நிச்சயம் இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்’’ என்றார்.

பாட்டிக்கும், பயிற்சியாளருக்கும் நன்றி

மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி – ராணி தம்பதியரின் மகள் ரேவதி (23) கூறும்போது, ‘‘நான் 3 வயதாக இருக்கும்போது அப்பாவும், 4 வயதில் அம்மாவும் இறந்துவிட்டனர். எனது தாய்வழிப் பாட்டியான ஆரம்மாளின் அரவணைப்பில் நானும் எனது தங்கை ரேகாவும் வளர்ந்து வருகிறோம்.

6-ம் வகுப்பு படிக்கும்போதே மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் ஷூ அணியாமல் ஓடி முதல் பரிசு பெற்றேன். இதைப் பார்த்த மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளப் பயிற்சியாளர் கண்ணன், எனக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார். பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து ஊக்கப்படுத்தினார்.

இந்தியா சார்பில் பங்கேற்பதற்குக் காரணமான பயிற்சியாளர் கண்ணன், எனது பாட்டி ஆரம்மாளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகள பயிற்சியாளர் கண்ணன் கூறும்போது, ‘‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் லட்சியத்தோடு தடகளவீராங்கனை ரேவதி கடும் பயிற்சி எடுத்தார். இவரை மதுரை மாவட்ட கூடுதல்எஸ்பியாக இருந்த வனிதா, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிஜெயந்தி மற்றும் தடகள அசோஷி யேஷன் செயலர் லதா உட்பட பலர் ஊக்கப்படுத்தினர்’’ என்றார்.

நாகநாதனுக்கு தேவாரம் வாழ்த்து

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் நாகநாதன்(25). காவலரான இவருக்கு தமிழ்நாடு அத்தெலடிக் அசோசியேஷன் தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலர் சி.லதா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT