ரூ.5 கோடி லஞ்சம் வாங்கியதாக ஐசிஎப் முன்னாள் தலைமை பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) முதன்மை தலைமை பொறியாளராக இருந்தவர் காத்பால். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவிட்டார். அவர் பணியில் இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஐசிஎப் டெண்டர்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு பலனாக அவர் ரூ.5.89 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காத்பால் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, காத்பால் மற்றும் தனியார் நிறுவன இயக்குநர்உட்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைதுசெய்தனர். காத்பால் வாங்கிய லஞ்சப் பணத்தை தனியார் நிறுவன இயக்குநரிடமே கொடுத்து வைத்திருந்ததும், ஓய்வுபெற்ற பிறகு அதை பெற திட்டமிட்டதும் தெரியவந்தது.
லஞ்சப் பணத்தில் முதல் தவணையாக, டெல்லியில் உள்ள காத்பாலின் சகோதரரிடம் தனியார் நிறுவனம் சார்பில்ரூ.50 லட்சம் அளிக்கப்பட்டு இருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த வழக்கு தொடர்பாக காத்பாலுக்கு சொந்தமாக டெல்லி, சென்னையில் உள்ள 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.2.75 கோடி, 23 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.