கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சைப் பிரிவு, புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தாய்மார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் கூறும்போது, “கரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சைப் பிரிவில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரு மருத்துவர், செவிலியர், இயன்முறை பயிற்சி அளிப்பவர், மன நல மருத்துவர், சிகிச்சை உதவியாளர்கள் ஆகியோர் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணிவரை பணியாற்றுவர். கரோனா பாதிப்புக்கு பின்பு சர்க்கரையின் அளவு அதிகரிப்பு, அதிக ரத்த அழுத்தம், மூச்சுவிடுவதில் சிரமம், தொடர் இருமல், சுவையின்மை, வாசனையின்மை, ஸ்டிராய்டு மருந்துசார்ந்த பிரச்சினைகள், பசியின்மை,உடல் எடை குறைதல், தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவோர் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு நேரடியாக ஆலோசனை பெறவும், தேவைப்பட்டால் உள்நோயாளியாக சிறப்பு சிகிச்சை பெறவும் வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளன. மேலும், எக்மோ எனும்உயிர் காக்கும் கருவி ரூ.30 லட்சம்செலவில் மருத்துவ மனைக்கு வழங்கப்பட்டுள்ளது. நிமிடத்துக்கு 400 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்ரூ.75 லட்சம் மதிப்பில் தொடங்கிவைக்கப் பட்டுள்ளது. கடந்த 3வாரங்களில் 130 பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் தடுப்பூசி முகாம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரித்த 1-ம் மாதம் முதல் 9-ம் மாதம் வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்” என்றார். மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், டீன் நிர்மலாஉடன் இருந்தனர்.