சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(19). அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் விழா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டில் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு, தன்னுடன் சமூகவலைதளம் மூலம் நட்பாகப் பழகி வந்த, சென்னையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவியை, அவரது பெற்றோருக்குத் தெரியாமல் சந்தோஷ் அழைத்துச் சென்றார்.
அங்கு அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்துள்ளார். அந்த மாணவி மயங்கியதும், அவருக்கு சந்தோஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மறுநாள் காலை எழுந்த மாணவி, தான் உடலளவில் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்து, தனது தாயிடம் உண்மையை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், சந்தோஷைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இப்போது அனைத்துத் தரப்பினரும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் பலரும் செல்போனிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர். மாணவ, மாணவிகள் பலரும் சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் அதிகம் உரையாடுகின்றனர்.
அப்போது, இதுபோன்ற தேவையில்லாத சிலரது நட்பு கிடைத்து விடுகிறது. சில நேரங்களில் எதிர் தரப்பில் இருப்பது யார், அவர்களது குணநலன், பின்னணி என்ன என்று கூட தெரியாமல், தங்களது அந்தரங்க விவகாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது பெரிய ஆபத்தில் முடிந்து விடுகிறது.
சில பெண்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியே சென்று விடுகின்றனர். அப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுகின்றன. எனவே, அறிமுகம் இல்லாதவர்கள், வெளியாட்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோருக்குத் தெரியாமல் வெளியே செல்லக்கூடாது” என்றார்.