தமிழகம்

கால்நடை சந்தை திறக்கப்படாத நிலையிலும் மேலப்பாளையத்தில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை திறக்கப்படாத நிலையில் சுற்றியுள்ள பகுதிகளில் ஆடுகள் விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை திறக்கப்படாத நிலையில் நேதாஜி சாலை, சக்தி நகர், அன்னை கதீஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள் விற்பனை நேற்று களைகட்டியது. படம்: மு.லெட்சுமி அருண்தென்மாவட்டங்களில் எட்டயபுரம், மேலப்பாளையம் ஆட்டுச்சந்தைகள் பிரசித்தி பெற்றவை. மேலப்பாளையத்திலுள்ள மாநகராட்சி கால்நடை சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றுவந்தது. ரூ.2 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும்.

இதற்காக திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து திங்கள்கிழமை இரவிலேயே விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வருவார்கள்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கால் கடந்த மே மாதத்திலிருந்து இந்த சந்தை மூடப்பட்டு, கால்நடைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக சந்தை திறக்கப்படாததால் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது ஊரடங்கு தளர்வுகள் வாரந்தோறும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கால்நடை சந்தைகளை திறக்க அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

கால்நடை சந்தை திறக்கப்படாத நிலையில் அதை சுற்றியுள்ள நேதாஜி சாலை, சக்திநகர், அன்னை கதீஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆடுகள் விற்பனை நேற்று களைகட்டியது. ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். அவற்றை வாங்குவதற்காக வியாபாரிகளும், கறிக் கடை நடத்துவோரும் திரண்டிருந்தனர். பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

SCROLL FOR NEXT