வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்தத்துக்கான 2ம் கட்ட முகாமில் 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பெயர் சேர்க்க மனு அளித்துள்ளனர். இரண்டு முகாம்களிலும் சேர்த்து பெயர் சேர்க்க மட்டும் 7 லட்சத்து 52 ஆயிரத்து 247 பேர் மனு அளித்துள்ளனர்.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான பதவிக் காலம் மே, ஜூன் மாதங்களில் முடிகிறது. இதையடுத்து, பொதுத்தேர்தலை நடத்துவதற் கான பணிகளை தேர்தல் ஆணை யம் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தல், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளித்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உள்ளிட்ட மூன்று ஆணையர்களும் வரும் 10-ம் தேதி தமிழகம் வந்து, தேர்தல் ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதுடன், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
முன்னதாக, தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலின் படி, 5 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் 5 கோடியே 62 வாக்காளர்கள் இருந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் மூலம் 17 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதற்கிடையில், புதிய வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என பலரும் கடிதம் எழுதியதால், மேலும் இரண்டு சிறப்பு முகாம்களை நடத்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் துறைக்கு அறிவுறுத்தியது.
இதன் படி, ஜனவரி 31-ம் தேதி முதல் கட்ட முகாம் நடந்தது. இம்முகாமில், பெயர் சேர்க்க 3 லட்சத்து 32 ஆயிரத்து 159 , பெயர் நீக்கம் செய்ய 16 ஆயிரத்து 430, திருத்தத்துக்கு 46 ஆயிரத்து 531, முகவரி மாற்றத்துக்கு 23 ஆயிரத்து 452 என 4 லட்சத்து 18 ஆயிரத்து 572 மனுக்கள் வந்தன.
இந்த மனுக்கள் மீதான ஆய்வுப் பணிகளை தேர்தல் அதிகாரிகள் தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் பிப்.6-ம் தேதி 2ம் கட்ட முகாம் நடந்தது. இம்முகாமில் பெயர் சேர்க்க 4 லட்சத்து 20 ஆயிரத்து 92, பெயர் நீக்கத்துக்கு 44 ஆயிரத்து 415, திருத்தம் செய்ய 68 ஆயிரத்து 969, முகவரி மாற்றத்துக்கு 36 ஆயிரத்து 490 என 5 லட்சத்து 69 ஆயிரத்து 966 மனுக்கள் வந்துள்ளன. இரண்டு முகாம்களிலும் சேர்த்து பெயர் சேர்க்க மட்டும் 7 லட்சத்து 52 ஆயிரத்து 247 பேர் மனு அளித்துள்ளனர். இது தவிர, ஆன்லைன் மூலமாகவும் தொடர்ந்து பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பாக மனுக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த மனுக்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட உள்ளன. முதலில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, அதன் பின் விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலருக்கு அனுப்பப்பட்டு, கள ஆய்வுக்குப் பின்னரே பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
எளிய நடைமுறை
மேலும், தமிழக தேர்தல் துறையே, வாக்காளர் பட்டியலில் இருந்து இரட்டைப் பதிவுகள் மற்றும் போலி வாக்காளர்கள் பெயர்களை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. முதல்கட்டமாக, முகவரி மாற்றம் கோரியவர்கள் பெயர்கள், பழைய இடத்தில் இருந்தால் அவை நீக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களே ஆன்லைன் மூலம் இரட்டை பதிவுகள் இருந்தால் ஒரு இடத்தில் பெயரை நீக்குவது, இறந்தவர்கள் பெயர்களை நீக்குவது மற்றும் முகவரி மாற்றத்துக்கான நடைமுறைகளையும் தேர்தல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக வாக்காளர்களுக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு இ-சேவை மையங்கள், பொது சேவை மையங்களிலும் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், வாக்காளர்கள் விண்ணப்பம் அளிக்கும் போது தங்கள் கைபேசி எண்ணை அளிக்கும் பட்சத்தில், தொடர் நடவடிக்கைகள் குறுஞ்செய்திகள் மூலம் வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் தேர்தல் துறையினர் தெரிவித்தனர்.
முதலில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, அதன் பின் விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலருக்கு அனுப்பப்பட்டு, கள ஆய்வுக்குப் பின்னரே பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.