தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கெனவே வீரர்கள் செல்லும் நிலையில் இன்று மேலும் தமிழக வீரர்-வீராங்கனைகள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து இதில், பாய்மரப் படகு போட்டியில் நேத்ரா குமணன், வருண் எ.தக்கர், கே.சி.கணபதி, மேசைப் பந்து போட்டியில் ஜி.சத்தியன், எ.சரத் கமல், வாள் சண்டைப் போட்டியில் சி.ஏ.பவானி தேவி, பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் டி.மாரியப்பன் என தமிழக வீரர்கள் 7 பேர் பங்கேற்கின்றனர்.
இது தவிர ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் இன்று அறிவித்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 3 வீராங்கனைகள் உள்ளிட்ட 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலெட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு என அறிவித்து, ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 7 வீரர், வீராங்கனைகளுக்குத் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்திருந்த முதல்வர் ஸ்டாலின், இன்று தேர்வான தடகள வீரர், வீராங்கனைகள் ஐவருக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளார்.