தமிழகம்

விளையாட்டுத் துறையில் இப்போது பெண்கள் ஆதிக்கம்: திருச்சி வீராங்கனை சுபா மகிழ்ச்சி

அ.வேலுச்சாமி

விளையாட்டுத் துறையில் இப்போது ஏராளமான பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற திருச்சி வீராங்கனை சுபா தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்கான இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தகுதித் தேர்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி தடகளப் பிரிவின் தொடர் ஓட்ட வீரர்கள் பட்டியலில் சுபா வெங்கடேசன் (கலப்பு 4*400 மீ தொடர் ஓட்டம்) திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பகவதிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - பூங்கொடி தம்பதியினரின் மகள் சுபா. சர்வதேசப் போட்டிகளில் 3 முறையும், தேசிய அளவிலான போட்டிகளில் 20 முறையும் வெற்றி பெற்றுள்ள இவர், முதல் முறையாகத் தற்போது ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்திடம் சுபா கூறும்போது, ''திருவெறும்பூர் அருகேயுள்ள கும்பக்குடி எனது பூர்வீக கிராமம். இப்போது பகவதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனது தாத்தா சங்கிலிமுத்து காவல்துறையில் பணியாற்றியதால், அவர்தான் எனக்குள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான ஊக்கத்தை விதைத்தார். நானும் மிகுந்த ஆர்வத்துடன் விளையாட்டில் கவனம் செலுத்தியதால், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையப் பயிற்சி மையத்தில் இடம் கிடைத்தது. அங்கிருந்தபடி பள்ளிப் படிப்பை முடித்தேன். இந்திரா என்பவரிடம் பயிற்சி பெற்றேன்.

அதன்பின் 2017-ல் பாட்டியாலாவில் உள்ள தேசியப் பயிற்சி மையத்தில் இடம் கிடைத்தது. கெலனா என்பரிடம் தற்போது பயிற்சி பெற்று வருகிறேன். சர்வதேச அளவிலான 8 போட்டிகளில் பங்கேற்று, அதில் 3 போட்டிகளில் பதக்கமும் வென்றுள்ள நிலையில் எனக்கு இதுவரை அரசுப் பணி கிடைக்கவில்லை. பலமுறை விண்ணப்பித்தும் ஏனோ கிடைக்கவில்லை. தகுதிக்கேற்ப ஓர் அரசு வேலை இருந்தால், அதைப் பயன்படுத்தி மேன்மேலும் இத்துறையில் சிறந்து விளங்க முடியும்.

நிச்சயம் இந்த ஒலிம்பிக் போட்டியில் எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன். விளையாட்டுத் துறையில் இப்போது ஏராளமான பெண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போதுதான், ஒவ்வொருவரின் திறமையும் வெளிப்படும். அந்த வாய்ப்பை ஏற்படுத்தப் பெற்றோர் உதவினால், பெண்களாலும் நிச்சயம் உயர்ந்த இலக்கை எட்ட முடியும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT