தமிழகம்

கப்பலூர் டோல்கேட்டில் வழக்கம்போல் சட்டவிரோதக் கட்டண வசூல்: முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா?

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மேம்பாலத்தில் சாலை பராமரிப்புப் பணிகள் நடப்பதால் நான்கு வழிச்சாலையைப் பயன்படுத்த விடாமல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருமங்கலம் ஊருக்குள் சுற்றி திருப்பி விடப்படும் வாகனங்களுக்கும், கப்பலூர் டோல்கேட்டில் வாகனங்களுக்கும் வழக்கம் போல் ரூ.85 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

மதுரை அருகே திருநெல்வேலி, விருதுநகர் செல்லும் என் எச்- 7 நான்கு வழிச்சாலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையகம் சார்பில் கப்பலூர் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட்டில் கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த டோல்கேட் உள்ள திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கூட இந்த டோல்கேட்டைக் கடந்து செல்வதற்குக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த நான்கு வழிச்சாலையில் உள்ள திருமங்கலம் பகுதியில் தினமும் எத்தனையோ விபத்துகள் தினமும் நடக்கின்றன.

விபத்தில் காயமடைந்தவர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். ஆனால், திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால், உயிருக்குப் போராடுகிறவர்களை அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியவில்லை.

அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கு சட்டவிரோதமாகக் கட்டணம் வசூல் செய்வது, பாஸ்ட்ராக் வந்தும் நீண்ட வரிசையில் காக்க வைக்கப்படும் வாகனங்கள் உள்ளிட்டவற்றால் டோல்கேட் ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விதிமுறைகளை மீறித் திருமங்கலம் நகராட்சிக்குள் இந்த டோல்கேட் அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒத்தக்கடையில் நடந்த திமுகவின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கு வந்த ஸ்டாலினிடம் பொதுமக்கள் நேரடியாக முறையிட்டனர். அதற்கு பதில் அளித்துப் பேசிய ஸ்டாலின், ‘‘தமிழகம் முழுவதும் முறையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் டோல்கேட்கள் அமைத்துள்ளதால் வாகன ஓட்டிகள், மக்கள் சாலைகளைக் கடந்துசெல்ல முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.

அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாமல் டோல்கேட்கள் தமிழகத்தில் உயிர் போகும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. டோல்கேட் உள்ள சாலைகளும் தரமாக இல்லை. ஆனால், மக்களிடம் வசூல் மட்டும் செய்கிறார்கள். சென்னையில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள டோல்கேட் பிரச்சினைகளை திமுக எம்.பி.க்கள், அமைச்சர் நிதின் கட்கரியிடம் கூறி முறையிட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுபோன்ற டோல்கேட் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்’’ என்றார்.

ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றும் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் டோல்கேட்டில் வழக்கம்போல் சட்டவிரோதக் கட்டணம் வசூலால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் கப்பலூர் டோல்கேட்டைத் தாண்டியதும், தற்போது திருநெல்வேலி செல்லக்கூடிய நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதனால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் செல்லக்கூடிய கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், திருமங்கலம் ஊருக்குள் திருப்பி விடப்படுகின்றன. அதனால், நான்கு வழிச்சாலையில் விரைவாகச் செல்ல முடியாமல் வாகனங்கள், திருமங்கலம் ஊருக்குள் செல்லும் குறுகிய சாலைகளில் விரைந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். அதனால், இந்த டோல்கேட் பகுதியில் நான்கு வழிச்சாலையில் 5 நிமிடங்களில் செல்லக்கூடிய பயண தூரம், வாகன ஓட்டிகளுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறது.

திருமங்கலம் பகுதியில் உள்ள இந்த நான்கு வழிச்சாலையில் ஊருக்குள் செல்லாமல் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்கே கப்பலூர் டோல்கேட்டில் ரூ.85 கட்டணம் செலுத்துகின்றனர். தற்போது இந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் ஊருக்குள் செல்வதற்கும் கப்பலூர் டோல்கேட்டில் வழக்கம்போல் ரூ.85 கட்டணம் வசூல் செய்கின்றனர். அதனால், டோல்கேட் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி முன்பு போல் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.

அதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தப் பிரச்சினையை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT