வரும் 9-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை டெல்லியில் நேரில் சந்திக்கவிருப்பதாக, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூலை 06) அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"ஜூலை 21-ம் தேதியிலிருந்து இந்தியாவில் தயாராகும் ஒட்டுமொத்தத் தடுப்பூசிகளின் அளவில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்குப் பிரித்து அனுப்பும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மேலும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் முகாமிட்டு இதனை நேரடியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
நாளை என்னையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளரையும், டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். 9-ம் தேதி அவரைச் சந்தித்து, கூடுதல் தடுப்பூசிகள், எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து அவருக்கு விளக்கவுள்ளோம்".
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.