டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, இன்று காலை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 06) காலை வரை பாசனத்துக்காக அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வீதம் திறக்கப்பட்டு வந்தது.
இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டதன் காரணமாக, மேட்டூர் அணைக்குத் தற்போது விநாடிக்கு 674 கன அடி வீதம் மட்டுமே நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆனால், பாசனத்துக்காக அணையிலிருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. அணையின் நீர்மட்டம் வேகமாகச் சரிந்து இன்று காலை 78.31 அடியாகக் குறைந்து காணப்பட்டது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.