சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய, சேலம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 9 நிர்வாகிகள், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகிகள் பலருடன் தொடர்ந்துசசிகலா பேசிவரும் நிலையில், அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் புறநகர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பிரிவு செயலர் சி.செல்லதுரை, நங்காவூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர்.பாலாஜி, மீனவர் பிரிவு முன்னாள் செயலர் ஏ.எல்.சுரேஷ்,நரசிங்கபுரம் நகர பிரதிநிதி மீனா தியாகராஜன், நரசிங்கபுரம் 11-வது வார்டு செயலர் ஏ.தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலர் கே.ஆனந்த், அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலர் கே.வேங்கையன், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் ரூபன் கே.வேலவன், விளாத்திகுளம் பேரூராட்சி ஜெயலலிதா பேரவை செயலர் ஆர்.பொன்ராஜ் ஆகியோர் இன்றுமுதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.