தமிழகம்

நீலகிரி மாவட்டத்தில் அரசு பூங்காக்கள் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கு தளர்வால், நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் கிளைகளில் இருந்து 250 பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் நேற்று இயக்கப்பட்டன. மாவட்டங்களுக்கு இடையே மக்கள் சென்று வர இ-பதிவு மற்றும் இ-பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

பூங்காக்களை திறக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையிலும், நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால், சுற்றுலா பயணிகளும், சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, ‘‘கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்குள் வருவதற்கு இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயம். தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தும் கிடைத்தவுடன் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களும், பூங்காக்களும் திறக்கப்படும்’’ என்றார்.

வியாபாரிகள் கூறும்போது, ‘‘தமிழக அரசு பூங்காக்களை திறக்க அனுமதி அளித்துள்ளதால், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் இடையூறு இல்லாமல் சென்று வருகின்றனர்.

ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதி இருந்தும் சுற்றுலா பயணிகள் வர முடியாத நிலை உள்ளது. சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளும் விரக்தி அடைந்துள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT