சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்கள், பொது வெளிகள், அரசு அலுவலகங்களில் மரங்களை வெட்டுவதைத் தடுக்கவும், கீழே விழுந்த மரங்களை அகற்றுவது தொடர்பான பரிந்துரைகளை வழங்கவும் மாநில, மாவட்ட அளவில் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு நிலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களை வெட்டவும், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உரிய அனுமதிகளை வழங்குவதற்கு பசுமைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்.30-ம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வனம், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, அரசு அலுவலகங்கள், அரசு நிலங்களில் இருந்து மரங்களை வெட்டுவதற்கான அனுமதியளிப்பது தொடர்பான பசுமைக்குழு, துறைதோறும் அமைக்கப்படுகிறது. மாநில பசுமைக் குழுவானது, தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவகால மாறுபாடு மற்றும் வனத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்படுகிறது. இக்குழுவில், தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலா, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளின் செயலர்கள், தமிழக டிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள். முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உறுப்பினர் செயலராக இருப்பார்.
அதேபோல், மாவட்ட அளவிலான பசுமை குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்படுகின்றன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, வருவாய், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையம், தொழில்துறை உயர் அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் சார்பில் இரு வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மாவட்ட வன அதிகாரி உறுப்பினர் செயலராக இருப்பார்.
மாநில அளவிலான குழுவானது, மாவட்ட அளவிலான குழுவுக்கு கொள்கை அடிப்படையிலான உதவியை வழங்கும். கீழே விழுந்த மரங்களை அகற்றுதல், நிற்கும் மரங்களை அகற்றுதலுக்கு உரிய கொள்கை உதவிகளை அளிக்கும். வனப்பரப்பை அதிகரித்தல் மற்றும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு மாவட்ட குழுவுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கும். 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த குழு கூடி திட்டங்களை வகுக்கும்,
மாவட்ட அளவிலான குழு, மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்கள், பொது இடங்களில் உள்ள மரங்கள் குறித்த கணக்கீடுகளை நடத்தி, ஒருங்கிணைந்த பட்டியலைத் தயாரிக்கும். மேலும், மாநில அளவிலான குழு அளிக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.