விக்கிரவாண்டி அருகே அரசுப் பள்ளி எதிரே இருக்கும் இடுகாடு விரைவில் மாற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
விக்கிரவாண்டி அருகே செ.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கிராமத்திற்கு பொதுவான இடுகாடு உள்ளது. இக்கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பள்ளி வேலை நேரத்தில் எரிப்பதால் குமட்டும் வாடை பள்ளியை சூழ்ந்து கொள்கிறது. இதனால் வகுப்புகளின் ஜன்னல்களை மூடி பாடம் நடத்தியுள்ளனர். பள்ளி எதிரிலேயே இடுகாடு இருப்பதால் இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் படித்து வருகின்றனர்.
இந்த இடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றவேண்டும் அல்லது இடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தவேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர் என்று அண்மையில் இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதனை தொடர்ந்து ஆட்சியர்மோகன் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வருவாய்த் துறை வட்டாரங்களில் கேட்ட போது,"பள்ளி வளாகத்திற்கு மேற்கே இடுகாடுக்கு வேறு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு ஊரக வளர்ச்சித் துறைக்கு அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. இந்த இடத்தை கிராம மக்களும் ஏற்றுக்கொண்டனர். விரைவில் இந்த இடுகாடு மாற்றப்பட உள்ளது. இடுகாடு மாற்றப்பட்ட பின்பு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது" என்ற தெரிவித்தனர்.