புதுவை பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெங்களூர் சென்று மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை இன்று சந்திக்கின்றனர்.
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிஆட்சி அமைந்துள்ளது. நீண்டஇழுபறிக்குப் பின்னர் என்ஆர் காங்கிரஸைச் சேர்ந்த 3, பாஜகவைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையில் பாஜக தரப்பு, அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீட்டில் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கடி தருவதாக தகவல் பரவியது.
இதுதொடர்பாக பாஜக சட்டப்பேரவை தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “என்ஆர்காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் துவக்கத்தில் இருந்தே பாஜகநெருக்கடி தருவதாக தகவல் பரப்பப்பட்டு வருகிறது. வெவ்வேறு கட்சிகள் இணைந்து செயல்படும்போது பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமானது. இது கூட்டணி என்பதால் பாஜகவுக்கானதை முதல்வரிடம் கேட்கிறோம். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எடுக்கிறோம். இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக முதல்வர் பாஜகமேலிடத்தில் பேசுகிறார். இலாக்கா ஒதுக்கீட்டில் முதல்வர் முடிவு எடுப்பார். இதில் பாஜக நெருக்கடி தரவில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில் பாஜக சட்டப் பேரவை தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜகஎம்எல்ஏக்கள், நியமன எம்எல்ஏக்கள், ஆதரவு எம்எல்ஏக்கள் ஆகியோர் பெங்களூர் சென்று மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை இன்று சந்தித்து பேச உள்ளனர்.