வைகுண்டம் பகுதியில் கிணறு வெட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்காமல் மிரட்டுவதாக சேலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்தசில வாரங்களாக பல்வேறு தரப்புமக்களும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனுக்களை அளித்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.
இட ஒதுக்கீடு
மருத்துவர், சலவைத் தொழிலாளர் உட்பட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அளித்த மனு:
ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது, 69 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆபத்தாக முடிந்துவிடும். இதனை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள 115 சமுதாயத்தினரும் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் பிறகு அறிஞர்களின் ஆலோசனைப்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்டத்தின் படி 20 சதவீத ஒதுக்கீடு முறையையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
பூஜாரிகள் பேரவை
கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் மு.சரவணன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்: அனைத்து பூஜாரிகளுக்கும் கரோனா உதவித்தொகை வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பூஜாரிகள் ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
சேலம் தொழிலாளர்கள்
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் ஊத்துப்பாளையத்தை சேர்ந்த கண்ணையா உள்ளிட்ட 25 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் தலைமையில் அளித்த மனு:
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள பத்மநாபமங்கலம் பகுதியில் கிணறு தூர்வாறும் பணிக்காக 12 ஆண்கள், 13 பெண்கள் என 25 பேரை அழைத்து வந்தனர். எங்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதமுள்ள பணம் ரூ.11.55 லட்சத்தை தராமல் மிரட்டி வருகின்றனர். எங்களுக்குரிய பணம் கிடைக்கவும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் குழுவினர்
திருச்செந்தூர் வட்டார மகளிர் சுய உதவி குழுவினர் அளித்த மனு: மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கமாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், திருச்செந்தூர் பகுதி தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் கடன் தவணை மற்றும் வட்டியைச் செலுத்துமாறு மிரட்டி வருகின்றனர். எங்களுக்கு வட்டி இல்லாமல் 3 மாதம் அவகாசம் பெற்றுத் தர வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.