சாத்தான்குளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் லிங்கத்துரை (44). இவருக்கு மனைவி பானுமதி மற்றும் 3 ஆண், 1 பெண் பிள்ளைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான லிங்கத்துரை தினமும் மது அருந்தி விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால், அவர் மனைவி மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்ததில், வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து லிங்கத்துரை மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்ததால், அவரை வீட்டுக்கு வர வேண்டாம் என மனைவி விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், வீட்டுக்கு போகமுடியாமல் தவித்த லிங்கத்துரை மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், போலீஸார் அவரது புகாரை கண்டு கொள்ளவில்லை.
இதனால் விரக்தியடைந்த லிங்கத்துரை, நேற்று மதியம் 12.30 மணியளவில் சாத்தான்குளம் வாரச்சந்தை அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தில் பாதி தூரம் ஏறி, கீழே குதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், ஜான்சன், எபனேசர், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வர்த்தக சங்க செயலர் மதுரம் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடம் வந்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மனைவியுடன் சேர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தனர்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர் இறங்கி வர சம்மதித்தார். ஆனால் அவரால் இறங்கி வர முடியவில்லை. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஹேரிஸ் தாமஸ் செல்வதாஸ் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் கோபுரத்தில் ஏறி அவரை கீழே இறக்கி கொண்டுவந்தனர். அவருக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது மனைவியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சாத்தான்குளத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.