தமிழகம்

இனி வாராவாரம் இணையவழியாக மக்கள் குறை தீர்ப்பு: கோவை ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைகேட்பு மாவட்ட ஆட்சியர் கேட்பதும், அது சம்பந்தமாக மனுக்கள் வாங்குவதும் காலங்காலமாக நடந்துவரும் ஒன்று. கரோனா தொற்று பொதுமுடக்கம் ஒட்டி பல மாதங்களாகவே இந்த குறைகேட்பு முகாம் அரசு அலுவலகங்களில் தவிர்க்கப்பட்டு வந்தது.

இருந்தாலும் வழக்கமாக திங்கட்கிழமைகளில் ஆட்சியரிடம் மனுக்கள் வழங்க வரும் மக்கள், கட்சியினர், பொது அமைப்பினர் வருவது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. தங்கள் மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து விட்டு சென்றனர் மக்கள்.

இதுவே பொதுப் போக்குவரத்து சுத்தமாக இல்லாத போதும், தளர்வுகளில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் ஆட்சியர் அலுவலகங்கள் வெறிச்சோடியது. இந்த நிலையில் பெரும்பான்மை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று பொதுப் போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கூடுதலாக மக்கள் வர ஆரம்பித்திருந்தனர்.

குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாதாரண நாட்கள் போலவே மனுக்களுடன் வந்த மக்கள் கணிசமாக காணப்பட்டனர். பொது அமைப்புகள், தன்னார்வலர்கள், விவசாயிகள் அணியாக திரண்டு வந்து கலெக்டரை கண்டு மனுக்கள் கொடுக்க காத்திருந்ததும் நடந்தது.

இந்த சூழ்நிலையில் கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இணையவழியாக நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) .சரண்யா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது...

ஒவ்வொரு வாரமும் திங்கள் அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை இணையவழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்;சியர்

அலுவலகம், பொது மக்கள் சேவை மையம், இ-சேவை மையம் ஆகியவற்றின் மூலமும் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டது.

அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாவிற்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களிலிருந்து இணையவழியாக நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பட்டாமாறுதல், நில அளவை, புதிய குடும்ப அட்டை, முதியோர் ஓய்வூதியம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர்கள் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர். இணையவழியாக நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளித்த பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் மக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீதான நடவடிக்கைகளை குறித்த காலத்திற்குள் விரைந்து மேற்கொள்ளுமாறு டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமைதோறும், இணையவழியாக மக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெறும். பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கலாம்!’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணையவழி குறைகேட்பு கூட்டம் முடிந்த பின்பு நேரடியாக வந்த மக்களிடமும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கா.சு.வேலாயுதன்

SCROLL FOR NEXT