தமிழகம்

நடப்பு நிதியாண்டில் ரூ. 9250 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட்: கேபினட் கூட்டாமல் அமைச்சர்களிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசு அனுமதிக்கு கோப்பு அனுப்பிவைப்பு

செ. ஞானபிரகாஷ்

நடப்பு நிதியாண்டில் ரூ. 9250 கோடிக்கு புதுச்சேரி பட்ஜெட் தாக்கலாகவுள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவையைக் கூட்டாமல் அமைச்சர்களின் கையெழுத்து பெறப்பட்ட கோப்பு மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

புதுவையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலை மாறி கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதிலும் கடந்த சில ஆண்டுகளாக புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் காங்கிரஸிலிருந்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார், தீப்பாய்ந்தான் உள்ளிட்டோர் விலகினர். அதைத்தொடர்ந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதனால் இடைக்கால் பட்ஜெட் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்படவில்லை. அதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் ஆட்சி புதுச்சேரியில் அமலானது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்த பிறகு புதுச்சேரியில் புதிய அரசு அமைந்த பின்பு முழு பட்ஜெட் தாக்கலாகும் என்றும், இடைக்கால பட்ஜெட் ஆகஸ்ட் வரை தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அமைந்துள்ளது. முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்று ஐம்பது நாட்களுக்கு பிறகு கடந்த 27ம் தேதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால் அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இச்சூழலில் ஆகஸ்ட்டில் பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு கோப்பினை முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

இதுபற்றி முதல்வர் வட்டாரங்கள் கூறுகையில், "புதுச்சேரியில் ஆகஸ்ட்டில் ரூ. 9250 கோடிக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய அனுமதி கேட்டு கோப்பினை அனுப்பியுள்ளார். வழக்கமாக அமைச்சரவை கூடி இறுதி செய்து பட்ஜெட் கோப்பு அனுப்புவது வழக்கம். தற்போது அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்காததால் பட்ஜெட் தொடர்பான கோப்பில் அமைச்சர்கள் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

கேபினட் கூட்டப்படாமல் அமைச்சர்களிடம் கையெழுத்து பெற்று மத்திய அரசுக்கு அனுப்பியகோப்புக்கு விரைவில் அனுமதி வரும். அதையடுத்து ஆகஸ்ட்டில் பட்ஜெட் புதுச்சேரியில் தாக்கலாகும் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT