புதுச்சேரி புதிய சட்டப்பேரவை வளாக மாதிரி வரைப்படம். | படம் எம். சாம்ராஜ் 
தமிழகம்

ரூ.320 கோடியில் புதுவையில் புதிய சட்டப்பேரவை வளாகம்: ஆகஸ்டில் அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ரூ. 320 கோடி கோடி செலவில் அமையும் புதிய சட்டப்பேரவை வளாகத்திற்கு அடிக்கல் நாட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஆகஸ்ட் மாதம் புதுச்சேரி வரவுள்ளார்.

இதனையொட்டி, பூர்வாங்கப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு செயலர்களுக்கு பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் ரூ. 320 கோடியில் புதிய ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்திற்கு ஒருங்கிணைந்த சட்டப்பேரவையை தட்டாஞ்சாவடியில் உள்ள அரசு இடத்தில் கட்டுவது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தலைமையில் இன்று மாலை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம், தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் முன்னிலை வகித்தார். துறை செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரவைச் செயலர் செல்வம், " புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான பூர்வாங்க பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" என அரசு செயலர்களிடம் கூறினார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் அரசு அதிகாரிகளுடன் பேரவைத்தலைவர் செல்வம் தலைமையில் நடந்த ஆலோசனைக்கூட்டம்

முன்னதாக புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ள இடத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் தறைகளின் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்போது இயங்கி வரும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

பேரவைத்தலைவர் செல்வம் இதுபற்றி கூறுகையில், " புதுச்சேரியில் புதிய சட்டப்பேரவை அடிக்கல் நாட்டு விழா வருகிற ஆகஸ்ட் மாத நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்ட உள்ளார். 16 மாதத்திற்குள் புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டி முடிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT