புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றானது இரட்டை இலக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அவர் கூறும்போது, ’’கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், முகாம் நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் பொதுமக்களுக்கு சலுகைகள் அறிவித்து தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில் அத்தகைய நிலையின்றித் தன்னெழுச்சியாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று இரட்டை இலக்க எண்ணிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றே இல்லாத நிலை மற்றும் கரோனா தொற்றால் இறப்பே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இந்த நிலை உருவாகும் போதுதான் பொதுமக்களைப் பாதுகாக்க தமிழக அரசு எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து மக்களுக்குத் தெரியும்.
தமிழக அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.