நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சுற்றுலாவை நம்பியுள்ளோர் வாழ்வாதாரம் இல்லாமல் விரக்தியடைந்துள்ளனர்.
கரோனா பரவல் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி முதல் மூடப்பட்டன. மாவட்டத்தில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தொற்றாளர்களின் எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால், இன்று பொதுப் போக்குவரத்து தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் கிளைகளிலிருந்து 250 பேருந்துகள் 50 சதவீதப் பயணிகளுடன் இயக்கப்பட்டன.
சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவில்லை
மாவட்டங்களுக்கு இடையே மக்கள் சென்று வர இ-பதிவு மற்றும் இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்துக்குள் வருபவர்களுக்கு கெடுபடிகள் இல்லாததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
பூங்காக்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும், நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் கேட்டபோது, ''நீலகிரி மாவட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் தேவை இல்லை. எனினும் கர்நாடகா, கேரளா உட்பட பிற மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் திறக்க தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் கிடைத்தவுடன் திறக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
வியாபாரிகள், தொழிலாளர்கள் விரக்தி
நீலகிரி மாவட்டம் சுற்றுலாவையே சார்ந்துள்ள மாவட்டம். மாவட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் சுற்றுலாவையே நம்பியுள்ளனர். இங்கு ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டாண்டுகளாக கரோனா பரவல் காரணமாக சுற்றுலா முடங்கியதால், வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. மேலும், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறைக்கு சுமார் ரூ.7 கோடி, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்கு சுமார் ரூ.7 கோடி, வனத்துறைக்கு சுமார் ரூ.5 கோடி, போக்குவரத்துக் கழகத்துக்கு சுமார் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, ''தமிழக அரசு பூங்காக்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. இதன் பேரில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அங்கு இடையூறின்றிச் சென்று வருகின்றனர். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் உட்பட அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாகப் போக்குவரத்து வசதி இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வர முடியாத நிலை உள்ளது. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் அருகேயுள்ள அனைத்துக் கடைளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சிறு வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளும் வியாபாரம் செய்ய முடியாமல் விரக்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.