அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர் மீது ரூ.15 லட்சம் மோசடி செய்துவிட்டதாக, புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கரின் நெருங்கிய ஆதரவாளர் புதுக்கோட்டை காமராஜபுரம் 34-ம் வீதியைச் சேர்ந்த கர்ணன் என்ற ஏ.கருணாகரன்.
இவர், புதுக்கோட்டை சுப்பிரமணியபுரம் 1-ம் வீதியைச் சேர்ந்த பி.ஆறுமுகத்திடம் (51) புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கேன்டீன் நடத்துமாறும், அதற்கு ரூ.15 லட்சம் முன்பணம் தருமாறும் கேட்டுள்ளார்.
அதற்குச் சம்மதித்த ஆறுமுகம், 2017-ல் கருணாகரனிடம் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர், ரூ.16 லட்சம் செலவு செய்து, கேன்டீனில் உள்கட்டமைப்புப் பணிகளை செய்ததோடு, தினசரி வாடகையாக ரூ.10 ஆயிரம் வீதம் கர்ணனிடம் கொடுத்து வந்தாராம். சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு, கூடுதலாக ரூ.10 லட்சம் முன்பணம் தருமாறும், தினசரி வாடகையை ரூ.20 ஆயிரமாக உயர்த்தித் தருமாறும் ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்ததால், ஆறுமுகத்தை வெளியேற்றிவிட்டு வேறு நபரை கேண்டீன் நடத்தச் செய்துள்ளார். இதையடுத்து, கொடுத்த ரூ.15 லட்சம் முன்பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டதற்கு கருணாகரன் கொடுக்க மறுத்து வருவதோடு, கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் பல முறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, கொடுத்த தொகையைத் திருப்பித் தரவும், குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனிடம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, அவரது மகள்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.