ஓசூர் அருகே மலையில் அமைந்துள்ள மின்சாரத்தையே கண்டிராத குக்கிராமமான நாகமலை மலை கிராம மக்களின் 50 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு மேக்னம் அரிமா சங்கம் சார்பில் இங்குள்ள வீடுகளுக்கு சோலார் மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பழங்குடியின மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் வெளிச்சம் காண உதவிய ஓசூர் மேக்னம் அரிமா சங்க நிர்வாகிகளை நாகமலை கிராம மக்கள் நன்றியுடன் பாராட்டி வருகின்றனர்.
ஓசூர் அருகே பேரிகை அடுத்துள்ள கும்பளம் ஊராட்சியில் நாகமலை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் உள்ள 56 குடிசை வீடுகளில் பழங்குடியின இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் சாலை, பேருந்து, மின்விளக்கு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாகத் தங்களுடைய பிள்ளைகளுக்கு இரவு நேரத்தில் கல்வி கற்பதற்குத் தேவையான மின்விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 50 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் போராடி வந்துள்ளனர். நவீன காலகட்டத்திலும் மின்விளக்கு வசதியின்றி வாழ்ந்து வரும் நாகமலை மக்களின் அவலநிலை குறித்த தகவல் அறிந்த ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினர் இந்த கிராமத்துக்கு சோலார் மின்விளக்கு வசதி அமைத்துக் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகமலை கிராமத்தில் வசிக்கும் ராஜப்பா கூறும்போது, ''இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். இங்கு 56 குடும்பங்கள் உள்ளன. இதில் 35 குடும்பங்களுக்குக் குடும்ப அட்டை உள்ளது. எனினும் கடந்த 50 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி பாதிக்கப்பட்டிருக்கிறோம். இங்குள்ள மாணவர்கள் இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் பாடப்புத்தகங்களைப் படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். வெளிச்சத்தை ஏற்படுத்த இரவு நேரத்தில் விறகு, குச்சிகளை எரியவைத்து அதன் மூலமாக வெளிச்சத்தை ஏற்படுத்தி வருகிறோம். மின்சார விளக்கு வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் எனப் பல்வேறு தரப்பிலும் மனு அளித்து, போராடி வந்திருக்கிறோம்.
ஆனாலும் யாரும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களின் நீண்ட நெடிய, இருண்ட வாழ்கையில் ஒளியேற்றும் வகையில் ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினர் இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் மின்விளக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இதனால் எங்களுடைய பிள்ளைகள் இரவு நேரத்தில் படிக்க வசதி ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்து விடும் விஷப்பூச்சிகளை எளிதில் கண்டறிந்து தப்பிக்கவும் முடியும். எங்களுக்குக் கடவுளாக வந்து உதவி செய்துள்ள மேக்னம் அரிமா சங்க நிர்வாகிகளை நாங்கள் இருக்கும்வரை மறக்கமாட்டோம்'' என்று தெரிவித்தார்.
இதுகுறித்து ஓசூர் மேக்னம் அரிமா சங்க சேவை திட்டத்தலைவர் ரவிசங்கர் கூறும்போது, ''கிராமத்தில் உள்ள 56 வீடுகளுக்கும் சோலார் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில் கிராமத்தின் மையப் பகுதியில் ஒரே இடத்தில் ரூ.1.30 லட்சம் மதிப்பில் சோலார் தகடுகள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு, 3 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பிரிவுக்கு 18 வீடுகள் என்ற வகையில் மொத்தம் 56 வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தங்களுடைய கிராமத்தில் சோலார் மின்விளக்கைப் பார்த்த கிராம மக்கள், பரவசம் பொங்க மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துக்கொண்டனர்'' என்று தெரிவித்தார்.
இந்த கிராமத்தில் நடைபெற்ற சோலார் மின்விளக்குத் தொடக்க நிகழ்வில் மேக்னம் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் டி.ரவிவர்மா தலைமை தாங்கி சோலார் மின்விளக்குப் பயன்பாட்டைத் தொடங்கி வைத்தார். இதில் ஓசூர் மேக்னம் அரிமா சங்கத் தலைவர் வி.ராமேஷ், இணைச் செயலாளர் வினோத் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.