புதுச்சேரியில் பெட்ரோல் விலை முதல் முறையாக இன்று ரூ.100-ஐத் தொட்டது. டீசல் விலை ரூ.92.99 ஆக உயர்ந்தது. கரோனா வரியைப் புதுச்சேரியில் மதுவுக்கு மட்டுமே நீக்கிய அரசு, பெட்ரோல், டீசலுக்கு நீக்காததால் தமிழகத்துக்கு இணையாக விலை உயர்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் பெட்ரோல் விலை முதல் முறையாக இன்று ரூ.100-ஐத் தொட்டது. அதேபோல் டீசல் விலையும் ரூ.92.99 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாகப் போக்குவரத்துத் தொழிலை நம்பியுள்ளோர் கூறுகையில், "கரோனா பெரும் தொற்று இரண்டாம் அலை காரணமாக மக்கள் வேலையின்றி வருமானம் இல்லாமல் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கரோனா பெருந்தொற்றைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து வருகிறது. இதன் காரணமாக அமைப்புசாரா தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களும் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை மே மாதம் ரூ.90-ம், டீசல் ரூ.84-ம் விற்பனையானது. தற்போது இரு மாதங்களில் ரூ.10 விலை அதிகரித்து பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தொட்டுள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.8 அதிகரித்து ரூ.92-ஐத் தாண்டியுள்ளது.
போக்குவரத்துத் தொழிலை நம்பியுள்ள ஆட்டோ, பேருந்து, லாரி, லோடு கேரியர், சுற்றுலா வாகனம் ஆகிய தொழில்கள் முடங்குவது மட்டுமின்றி போக்குவரத்துக் கட்டணமும் உயரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டனர்.
கரோனா வரியை நீக்கினால் பெட்ரோல், டீசல் விலை புதுச்சேரியில் குறையும்
பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட விலை குறைவாக இருக்கும். ஆனால், தற்போது தமிழகத்துக்கு இணையாகப் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தரப்பில் விசாரித்தபோது, "கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி சுகாதாரத் துறைக்காக எனக் குறிப்பிட்டு புதுச்சேரியில் கரோனா நிதிக்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு சதவீதம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 22.15 சதவீதமும் டீசல் மீதான வரி 18.15 சதவீதமும் அமலுக்கு வந்திருந்தது.
இச்சூழலில் மீண்டும் கடந்த ஆண்டு மே 29-ம் தேதியன்று பெட்ரோல், டீசல் வரியைப் புதுச்சேரி அரசு உயர்த்தியது. அதன்படி பெட்ரோல் மீதான வரி 5.85 சதவீதம் அதிகரித்து
புதுச்சேரி காரைக்காலில் பெட்ரோல் மீதான வரி 28 சதவீதமானது. டீசல் வரி 3.65 சதவீதம் அதிகரித்து 21.8 சதவீதமானது. இதையடுத்து பெட்ரோல் ரூ.72க்கும், டீசல் ரூ.67க்கும் விற்பனையாது. இச்சூழலில் புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் மதுபானங்களுக்கான கரோனா வரியை மட்டும் நீக்கினர். ஆனால், பெட்ரோல், டீசல் விலையில் கரோனா வரியை நீக்காததுதான் தற்போதைய விலை உயர்வுக்குக் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அதனால்தான் தமிழகத்துக்கு இணையாகப் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.