கரூர் மாவட்டத்தில் 6 வாரங்களுக்குப் பின் பேருந்துகள் இயக்கப்பட்டன. கோயில்கள், உணவகங்கள் திறக்கப்பட்டன.
கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததால், கடந்த சில வாரங்களாக பிற மாவட்டங்களை விட குறைந்தளவு தளர்வுகளே கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டன. இன்று (ஜூலை 05) முதல் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் இன்று முதல் அரசுமற்றும் தனியார் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. மாவட்டத்தில் உள்ள 5 பணிமனைகளில் இருந்து பேருந்துகள் காலை முதலே பேருந்து நிலையத்திற்கு ஷெட் அவுட் செய்யப்பட்டன. திருச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், நகரப்பேருந்துகளும், சிறிய பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தளவிலே இருந்தன. பயணிகளின் வருகையைப் பொறுத்து பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்துக் கழகத்தினர் தெரிவித்தனர். தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
கோயில்கள் திறப்பு
கரூர் பசுபதீஸ்வரர் உள்ளிட்ட கோயில்கள் திறக்கப்பட்டன. காலை 6 மணிக்கு கோயில்கள் திறக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கோயில்களுக்கு வந்தனர். பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிடைசர் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உணவகங்கள் திறக்கப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தினர். ஜவுளி, நகை, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.