தமிழகம்

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் இன்று முதல் அமல்: பேருந்து போக்குவரத்து, வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், கடந்த மே 24-ம் தேதி தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு 5 கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்று (5-ம் தேதி) காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த2-ம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஊரடங்கு வரும் 12-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர,தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுகின்றன. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பேருந்துபோக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு, தனியார் தொழில் சார்ந்த பொருட்காட்சிகள் செயல்படலாம். உணவகம், விடுதி, அடுமனை, தேநீர் கடைகளில் காலை 6 முதல்இரவு 8 மணிவரை 50 சதவீதம் பேர் அமர்ந்து தேநீர், உணவு அருந்தலாம். உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம். டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல்இரவு 8 மணி வரை இயங்கும்.

துணி, நகைக் கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். வணிக வளாகங்கள் காலை 9 முதல் இரவு 8 மணிவரை செயல்படலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை ரத்துசெய்யப்பட்டுள்ளது. திருமணநிகழ்வுகளில் 50 பேர், இறுதிச்சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம். திரையரங்கு, விளையாட்டுக் கூடம், மதுக்கூடம், நீச்சல்குளம், பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லை.

SCROLL FOR NEXT