தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச் சூடு, தடியடி மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே 27 கட்ட விசாரணை நடந்துள்ளது.
ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடந்த மே மாதம் வழங்கினார். அதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை, வழக்குகளில் சிக்கி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கியது.
இந்நிலையில், ஆணையத்தின் விசாரணை 2 மாதங்களுக்கு பின்னர் இன்று (ஜூலை 5) மீண்டும் தொடங்குகிறது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை விசாரணை நடத்துகிறார்.
ஆணையம் சார்பில் இதுவரை மொத்தம் 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, 719 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கும் விசாரணையில்ஆஜராகுமாறு துப்பாக்கிச் சூடுசம்பவம் நடந்த அன்று பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த 102 போலீஸாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுஉள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.