கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்புதூர் ஊராட்சியில் அண்ணாநகர், முதலிபாளையம், குரும்பபாளையம், முத்துக்கவுண்டன்புதூர், காளியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால், முதலிபாளையத்தில் மந்தைவெளி புறம்போக்காக இருந்த சுமார் 3.75 ஏக்கர் நிலத்தை, திறந்தவெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். சீமைக்கருவேல முள் மரங்கள் வளர்ந்து, பள்ளமும், மேடுமாக காட்சியளித்த அந்த இடம் தற்போது பசுஞ்சோலைபோல மாறியுள்ளது. அரசு சார்பில் ஏழைகளுக்கு கழிப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர். மற்றவர்கள் தாங்களாகவே வீடுகளில் கழிப்பறைகளை கட்டிக்கொண்டுள்ளனர்.
இந்த மாற்றம் குறித்து ஊராட்சித் தலைவர் வி.பி.கந்தவேல் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு, அப்போதைய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜ் அறிவுறுத்தலின்படி, நிலத்தின் ஒருபகுதியில் நர்சரியும், எஞ்சியுள்ள இடங்களில் மரக்கன்றுகளும் நட முடிவு செய்யப்பட்டது. முதலில் இடத்தைச் சுற்றிலும் கம்பி வேலி அமைத்தோம். பின்னர், சொட்டுநீர் பாசன வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பெண்களைக் கொண்டு பழ மரக் கன்றுகள், இதர நாட்டு மரக் கன்றுகளை நட்டு பராமரிக்கத் தொடங்கினோம். இங்கேயே மண்புழு உரம் தயாரித்து மரக்கன்றுகளுக்கு இடுகிறோம். நர்சரியில் பூவரச மரம், புளிய மரக்கன்றுகளை உருவாக்கி மற்ற ஊராட்சிகளுக்கும் விநியோகம் செய்து வருகிறோம். டெங்கு பரவிய காலத்தில் வீடுகளுக்கு கொசுக்கள் வராமல் தடுக்க, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நொச்சி செடிகளை வளர்த்து, விநியோகித்தோம்.
3,500 மரங்கள்
தற்போது மா, பலா, கொய்யா, சப்போட்டா, சீத்தா, நெல்லிக்காய், நாவல், சிவப்பு மாதுளை ஆகியவை காய்த்துள்ளன. இதுதவிர, எலுமிச்சை, பாதாம், பென்சில் மூங்கில், நீர் மருது, மகிழம், ரோஸ்மேரி, சரக்கொன்றை, இலுப்பை, வேப்ப மரம், புங்க மரம், அரச மரம் உள்ளிட்ட நாட்டு மரங்களும் உள்ளன. பழ வகை மரங்கள், இதர மரங்கள் என மொத்தம் சுமார் 3,500 மரங்கள் உள்ளதால், இப்பகுதி ஆக்சிஜன் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது.
இங்கிருந்து கிடைக்கும் பழங்களை அருகில் உள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்காக அளிக்கலாம் என திட்டமிட்டுள்ளோம். மரம் வளர்க்கும் திட்டத்துக்கு தற்போதைய மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதாவும் உறுதுணையாக இருந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.