நீலகிரி மாவட்டம் கூடலூரில் தந்தை, மகன் உட்பட மூன்று பேரை கொன்ற காட்டு யானை, வனத் துறையினரால் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயரண்யம் முகாமில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆக்ரோஷமாக காணப்பட்ட யானை, பின்னர் பாகன்களின் கட்டளைகளுக்கு இணங்கியது. இந்த யானைக்கு வனத்துறையினர் சங்கர் என பெயரிட்டனர்.
இந்நிலையில், 141 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர், கூண்டிலிருந்து நேற்று யானை வெளியே அழைத்து வரப்பட்டது.முன்னதாக, புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல், துணை இயக்குநர் காந்த்மற்றும் வனத் துறையினர் முன்னிலையில் பூஜை நடைபெற்றது.
பாகன்கள் விக்ரம், சோமன் ஆகியோர் யானைக்கு கரும்பு கொடுத்து வெளியே அழைத்தனர். ஆரம்பத்தில் தயக்கத்துடன் கூண்டிலேயே நின்ற யானை, பின்னர் பாகன்கள் நீட்டிய குச்சியை பிடித்துக்கொண்டு வெளியே வந்தது. பாதுகாப்புக்காக கும்கிகள்சுற்றிலும் நிற்க, சங்கர் யானையை அங்குள்ள மரத்தில் சங்கிலியால் கட்டி வைத்தனர்.
வெளியே வந்த குஷியில், தரையில் படிந்திருந்த மண்ணை வாரி உடலில் போட்டதுடன், புற்களையும் அள்ளியெடுத்து வாயில் போட்டுக் கொண்டது.
கும்கியாக மாற்றப்படும்
கள இயக்குநர் கே.கே.கவுசல் கூறும்போது, ‘‘முதுமலை முகாமில்27 யானைகள் இருந்தன. சங்கர், ரிவால்டோ மற்றும் கூடலூரில் பிடிபட்ட யானைகளுடன் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. பாகன்களின் கட்டளைகளை யானைபுரிந்துகொண்டு செயல்பட்டு வருகிறது. யானைக்கு புதிய பெயர்வைக்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும். கும்கியாக மாற்ற பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.