தமிழகம்

மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட 20 இடங்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டம்

செய்திப்பிரிவு

சென்னையில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு, காசிமேடு உள்ளிட்ட 20 இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 5-ம் தேதி (இன்று) முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள், காசிமேடு மீனவ சங்கங்கள், ஓட்டல் மற்றும் வணிக வளாக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

அதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்று வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அக்கூட்டத்தில் சென்னையில் துணி, நகைக் கடைகள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் திறக்கப்பட உள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ள இடங்களாக கோயம்பேடு சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, நொச்சிக்குப்பம், வானகரம் மீன் சந்தை உள்ளிட்ட 20 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அப்பகுதிகளில் கரோனா பரவல் தடுப்பு விதிகள் முறையாக கண்காணிக்கப்படுகிறதா என மாநகராட்சி, காவல்துறை, வருவாய்த் துறை ஆகிய துறைகள் இணைந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் நடமாடும் ஊரடங்கு அமலாக்க குழுக்களைப் போல, நிலைக் குழுக்களை அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகள், கோயம்பேடு சந்தை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதிகளில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளன.

கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். முகக்கவசம் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்தல், முகக்கவசம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

வணிக வளாகத்துக்கு வரும் அனைத்து வியாபாரிகள் மற்றும் பணிபுரியும் நபர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வணிகர் சங்கங்கள் சார்பில் அறிவுறுத்த வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க கடைகள், வணிக வளாகங்களில் மதிய உணவு அருந்தும்போது பணியாளர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT