சென்னை காமாட்சி மருத்துவமனையில் கணைய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நலமுடன் இருக்கும் குழந்தையுடன் பெற்றோர். அருகில் மருத்துவர்கள் மூர்த்தி, வைத்தீஸ்வரன், சுசித்ரா ரவிசங்கர், ரோஸி இளஞ்செழியன், சித்ரா பத்மநாபன், வித்யா சாயா ஆகியோர். 
தமிழகம்

டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு கணைய அறுவை சிகிச்சை

செய்திப்பிரிவு

பிறந்து 100 நாட்களே ஆன குழந்தையின் கணையத்தை முற்றிலுமாக நீக்கும் சிக்கலான அறுவை சிகிச்சை, சென்னையில் உள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சில மாதங்களுக்கு முன்பு ஓர் இளம் தம்பதிக்கு 2-வது குழந்தை பிறந்தது. பிறந்த 4 மணி நேரத்தில், அந்த பெண் குழந்தையின் உடலில் நீலம் பரவுவதும், சுவாசிக்க சிரமப்படுவதும் தெரியவந்தது. உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு, குழந்தைக்கு உடனடி சிகிச்சை தொடங்கப்பட்டது.

பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் வைத்தீஸ்வரனின் ஆலோசனை மற்றும் கண்காணிப்பில் குழந்தைக்கு குழாய்மூலம் தேவையான குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. இதில், உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் தாறுமாறாக ஏற்றம் காணும் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, 100 நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்து, குழந்தையின் குளுக்கோஸ் அளவை மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது. உள்ளுறுப்புகள், அதன் செயல்பாடுகளை படம் பிடிக்கும் ஸ்கேன் (DOTA NOC Scan) உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், கணையத்தில் உள்ள அசாதாரண பீட்டா வகை உயிரணுக்கள் அங்கு உற்பத்தியாகும் இன்சுலின் அளவை தொடர்ந்து அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கணையத்தை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக நீக்குவதுதான் தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பெற்றோர் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து, டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் மூர்த்தி தலைமையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது.

இதுபற்றி மருத்துவர் வைத்தீஸ்வரன் கூறியபோது, ‘‘அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நல்ல உடல்நலத்தோடு உள்ளது. ரத்த சர்க்கரை குறைபாடு இப்போது முற்றிலும் இல்லை. இனிமேல் குழந்தையின் வளர்ச்சி இயல்பாக இருக்கும். பின்னாளில் சிறு வயதிலேயே நீரிழிவு நோய் ஏற்பட்டால்கூட, எளிதாக கட்டுப்படுத்திவிடலாம்’’ என்றார்.

மருத்துவக் குழுவினரை பெற்றோர் பாராட்டி குழந்தையுடன் வீடு திரும்பினர்.

SCROLL FOR NEXT