வேளச்சேரி சந்திப்பில் 3 முக்கிய சாலைகளையும் இணைத்து ரூ.108 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்குவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மேம்பால பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதிகளில் வேளச்சேரி முக்கிய இடமாக விளங்குகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2012-ம் ஆண்டு ‘‘வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் தரமணி சாலை, தாம்பரம், வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழி சாலைகளை இணைத்து மேம்பாலம் கட்டப்படும். மேலும் இந்த மேம்பாலத்துடன் வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர்மட்ட நடைபாதை அமைக்கப்படும்’’ என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது. ஆனால், திட்டமதிப்பீடு தொகை குறைவாக இருக்கிறது என ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்க மறுத்து வந்தனர். இதனால், மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் பேச்சு நடத்தி சுமூக நிலையை நெடுஞ்சாலைத்துறையினர் எட்டியுள்ளனர்.
ரூ.108 கோடி செலவில்
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் 3 முக்கிய சாலைகளை இணைக்கும் வகையில் ரூ.108 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் மூலம் நிறுவனத்தை இறுதிசெய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது. நிலம் கையகப்படுத்துதல், கட்டுமான உதிரி பொருட்களின் விலைஉயர்வை காரணம் காட்டி தற்போதுள்ள திட்டமதிப்பீடு தொகையில் இருந்து சுமார் 23 சதவீதம் வரையில் உயர்த்த கேட்டனர்.
ஆனால், அந்த அளவுக்கு தொகையை உயர்த்தி அளிக்க முடியாது என தெரிவித்தோம். தற்போது, கணிசமான அளவுக்கு திட்டமதிப்பீடு தொகையை உயர்த்தி தருவதற்கு அரசு சம்மதம் தெரிவித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இறுதியாக பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் சமரசமாகியுள்ள நிலையில், அடுத்த ஒரு மாதத்தில் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்’’ என்றனர்.