தமிழகம்

இரண்டரை ஆண்டுகளாக கிடைக்காத கஜா புயல் நிவாரணம்: வீடு இல்லாமல் பள்ளிக்கூடத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஜா புயலில் வீடு இடிந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளாக அதற்கான நிவார ணம் கிடைக்காததால், பள்ளி வளாகத்தில் படுத்துறங்கி வசித்து வருகிறார் கூலித் தொழிலாளி ஒருவர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(43). விவசாய கூலித் தொழிலாளி. பெற்றோர் இறந்த நிலையில், திருமணமாகாத தனது அண்ணனுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். சிவக்குமார் வெளியூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் சிவக்குமாரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்தது, இதில், இடிபாடுகளில் சிக்கிய அவரது அண்ணன் சுரேஷ் இறந்தார்.

கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அப்போது அரசு அறிவித்ததையடுத்து, நிவாரணம் பெற உரிய ஆவணங்களுடன் சிவக்குமார் விண்ணப்பித்தார். ஆனால், இரண்டரை ஆண்டுகள் கடந்தும், சிவக்குமாருக்கு கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை. போதிய வருமானம் இல்லாத நிலையில், நிவாரணமும் கிடைக்காததால், இடிந்த வீட்டை சீரமைக்க முடியாமல் சிவக்குமார், அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் வசித்து வருகிறார்.

இதுகுறித்து சிவக்குமார் கூறும்போது, எங்கள் வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லை. கஜா புயலின்போது, வீடு இடிந்ததில் 2 நாட்களாக பெரிய கற்கள், ஓடுகளுக்கு இடையே அண்ணன் சிக்கி தவித்துள்ளார். அதன் பிறகு ஊர்க்காரர்கள் பார்த்து வீட்டின் மீது கிடந்த மரங்களை வெட்டி அகற்றி, எனது அண்ணனை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பயனில்லை.

அப்போது, புயலால் உயிரிழந்தவர்களுக்கு அரசு அறிவித்த நிவாரண நிதி கிடைத்தால், வீடு கட்டலாம் என இருந்தேன். இதற்காக நான் அதிகாரிகளை அணுகி அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால், இன்னும் நிதி வரவில்லை. கூலி வேலையில் கிடைக்கும் வருமானம் உணவுக்கே செலவாகி விடுகிறது. எனக்கென யாரும் இல்லாததால் வசிக்க வீடு இல்லாமல் பெரும் துயரத்தை சந்தித்து வருகிறேன் என்றார்.

இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்பட்டும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT