தேர்தலில் வென்று ஐம்பது நாட்களுக்குப் பிறகு அமைச்சர்களாகப் பதவியேற்று ஒரு வாரமாகியும் துறைகள் ஒதுக்கீட்டுக்காகப் பொறுப்பேற்றோர் காத்துள்ளனர். முதல்வர் ரங்கசாமி வழக்கம்போல் தொடர் மவுனத்தில் உள்ளார்.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்று 50 நாட்கள் இழுபறிக்குப் பிறகு என்ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த 3, பாஜகவைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் தமிழிசை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அமர்ந்து அமைச்சர்கள் கோப்புகளுக்குக் கையெழுத்திட்டுப் பணிகளைத் தொடங்கினர்.
எனினும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற ஐவருக்கும் இதுவரை துறைகளை முதல்வர் ரங்கசாமி ஒதுக்கவில்லை. அவர் வழக்கம்போல் தொடர் மவுனத்தில் உள்ளார். பதவியேற்றது முதல் இதுவரை பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையும் ரங்கசாமி தவிர்த்து வருகிறார்.
தினமும் அமைச்சர்கள் அறைக்கு வந்து, அமைச்சர்கள் அமர்ந்து செல்கின்றனர். அவர்களின் ஆதரவாளர்கள் தினமும் வந்து அமைச்சர்களைப் பார்ப்பதால் சட்டப்பேரவை நிரம்பி வழிகிறது. கடந்த ஒரு வாரமாக அமைச்சர்களின் ஆதரவாளர்கள் தங்களுக்கு ஒவ்வொரு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறித் தகவல்களை வெளியிடுகின்றனர்.
அதன்படி, "நமச்சிவாயத்துக்கு உள்துறை, லட்சுமி நாராயணனுக்கு சுகாதாரத்துறை, தேனீ ஜெயக்குமாருக்கு உள்ளாட்சித்துறை, சந்திர பிரியங்காவுக்கு கல்வித்துறை, சாய் சரவணக்குமாருக்கு சமூக நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பை முதல்வர் தெரிவிப்பார்" என்று குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையே பாஜக தரப்பில் டெல்லி சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்துத் திரும்பியுள்ளனர். அவர்கள் தரப்பில் விசாரித்தபோது, "பாஜக விரும்பும் துறைகளின் பட்டியலை முதல்வரிடம் தந்துவிட்டோம். முதல்வர் ரங்கசாமி நாளை (ஜூலை 5) அமைச்சர்களுக்கான துறைகளை அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். துறை ரீதியான நலத்திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தனர்.