தமிழகம்

பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை: கைதான மதுரை காப்பக நிர்வாகி வாக்குமூலம்

என்.சன்னாசி

பெரும் தொகைக்கு ஆசைப்பட்டுக் குழந்தைகளை விற்கவில்லை என மதுரையில் குழந்தைகளை விற்ற வழக்கில் கைதான காப்பக நிர்வாகி சிவக்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை ஆயுதப்படை மைதானம் பகுதியில் ‘இதயம் டிரஸ்ட்’ என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தியவர் சிவக்குமார் (40). இவரது காப்பகத்தில் ஆதரவற்ற முதியோர்களுடன் 10-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளும் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்துவிட்டதாகக் கூறிய காப்பக நிர்வாகிகள், அக்குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த குழந்தையில்லாத கண்ணன்- பவானி தம்பதிக்கு விற்பனை செய்திருப்பது தெரிந்தது. மேலும், அந்த காப்பகத்திலிருந்து 2 வயதுப் பெண் குழந்தையை மதுரை கல்மேடு சகுபர் சாதிக்- அனஷ்ராணி தம்பதிக்கு விற்றதும் தெரிந்து, 2 குழந்தைகளையும் தனிப்படை போலீஸார் மீட்டனர்.

இது தொடர்பாகக் காப்பக நிர்வாகி சிவக்குமார், அவரது நண்பர் மதர்சா, காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு தம்பதியர் உள்ளிட்ட 9 பேரில் 7 பேரைக் கைது செய்தனர். தலைமறைவான காப்பக நிர்வாகி சிவக்குமார், மதர்சாவைப் பல்வேறு இடங்களில் தனிப்படையினர் தொடர்ந்து தேடினர்.

இந்நிலையில், அவர்கள் சொகுசு கார் ஒன்றில் கேரளாவுக்குத் தப்பிக்க முயன்றபோது, தேனி மாவட்டம் போட்டி அருகே கரடிப்பட்டி விலக்கில் வைத்து தேனி போலீஸார் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். மதுரை தல்லாகுளம் போலீஸாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். கூடல்புதூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடம் மதுரை காவல் துணை ஆணையர் தங்கத்துரை, கூடுதல் துணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வக்குமார் உள்ளிட்டோர் விசாரித்தனர். நேற்று இரவு முதல் இன்று மாலை வரை இருவரிடமும் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, துருவித் துருவி விசாரித்தனர். ஒவ்வொரு கேள்விக்கும் அவர்கள் அளித்த பதில் விவரங்களை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர்.

சிவக்குமார் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘‘சேவையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முதியோர் காப்பகம் நடத்தினேன். காப்பகத்தில் குழந்தைகள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் வெளியில் நன்றாக வளர்வார்களே என்ற நோக்கத்தில் குழந்தையில்லாத தம்பதியருக்கு வழங்கினோம். பெரிய தொகை, பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை. ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாக நான் யாருக்கும் வாட்ஸ் அப் ஆவணம் எதுவும் அனுப்பவில்லை.

குழந்தைகள் விவகாரத்தில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது எனக் கருதினேன். இருப்பினும், இந்த விவகாரத்தில் போலீஸார் தேடுவதை அறிந்து, மதர்சாவுடன் தலைமறைவாகி எங்காவது நீதிமன்றத்தில் நேரில் சரண் அடையலாம் எனக் கருதினோம். ஆனாலும், தேனி அருகே போலீஸிடம் சிக்கினோம்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சிவக்குமார் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT