கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 பேர் கருப்புப் பூஞ்சை தொற்று முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய கண்பார்வை பறிபோய் விட்டதாக மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் கூறியதாவது:
''கரோனா தொற்றில் இருந்து மீண்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை அளவை மருத்துவரின் ஆலோசனையுடன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு உள்ளபோதோ அல்லது தொற்றில் இருந்து மீண்ட பிறகோ மூக்கடைப்பு, மூக்கில் இருந்து ரத்தம் கலந்த சளி வருதல், முகத்தில் வலி, முகத்தில் மரமரப்பு, கண்கள் சிவப்பாக மாறுவது, கண்ணைச் சுற்றி வீக்கம், கண் வலி மற்றும் பார்வைக் குறைபாடு, தலைவலி, பல் வலி மற்றும் பற்கள் ஆடுவது ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
துணியால் ஆன முகக்கவசம் அணிபவர்கள், முகக்கவசம் ஈரமாகி விட்டால் அதை அணியக் கூடாது. தினமும் முகக் கவசத்தைத் துவைத்து, காயவைத்து உபயோகிக்க வேண்டும். ஒரே முகக்கவசத்தைத் தொடர்ச்சியாக உபயோகிக்கக் கூடாது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், சுமார் 30 பேர் கருப்புப் பூஞ்சை தொற்று முற்றிய நிலையில் வந்ததால் அவர்களுடைய பார்வை பறிபோய்விட்டது. ஆனால், அறுவை சிகிச்சை செய்து நோயை குணப்படுத்திவிட்டோம்.
ஆரம்ப நிலையிலேயே தொற்றைக் கண்டறிந்துவிட்டால் பரிபூரணமாகக் குணமாக்கி விடலாம். தாமதித்தால் கண்பார்வை இழப்பு, உயிரிழப்பு ஏற்படும். இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை மட்டுமின்றி, 'ஆம்பொடரிசின் பி' எனப்படும் மருந்தையும் கொடுக்க வேண்டும். இந்த மருந்து நமது மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது. பொதுமக்கள் யாரும் கருப்புப் பூஞ்சை தொற்று குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஆனால், கண்டிப்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். அறிகுறி தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும்''.
இவ்வாறு டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.