திரைப்பட நடிகையுடன் குடும்பம் நடத்தி, கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, நீதிமன்ற உத்தரவின்படி மதுரையிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் மணிகண்டன். ராமநாதபுரம் தொகுதியில் இருந்து 2016-ல் எம்எல்ஏவாகத் தேர்வான இவர், அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து கட்சியில் நீடித்த அவர் 2021-ல் மீண்டும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனாலும், கட்சித் தலைமை வாய்ப்பளிக்கவில்லை.
இந்நிலையில் அவர் அமைச்சராக இருந்தபோது, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, 2 ஆண்டுக்கு மேல் குடும்பம் நடத்திவிட்டும், 3 முறை கருக்கலைப்பு செய்தும் ஏமாற்றியதாக மலேசியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை சாந்தினி, சென்னையில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அப்போது, சில புகைப்பட ஆதாரங்களைக் காவல்துறையில் சமர்ப்பித்து இருந்தார். இதன்பேரில், முன்னாள் அமைச்சர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான அவரைத் தொடர்ந்து தேடிய நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையாறு போலீஸார் சென்னை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றனர். நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள அவரது வீடு மற்றும் விடுதியில் வைத்து விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது. சென்னையில் இருந்து அடையாறு காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீஸார் இன்று காலை அவரை போலீஸ் வேனில் மதுரைக்கு அழைத்து வந்தனர். 7 மணிக்கு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர்.
வீட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான செல்போன் ஒன்றைக் கைப்பற்றியதாகவும், மதுரை லேக்வியூ பகுதியிலுள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்ட நிலையில், ஓரிரு காரணங்களால் அங்கு அழைத்துச் செல்லாமல், மீண்டும் சென்னைக்கு அழைத்துச் சென்றதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.