தமிழகம்

தமிழகத்தின் நீராதாரத்தை எவ்வகையிலும் விட்டுத்தரக் கூடாது: ஜி.கே.மணி வலியுறுத்தல்

எஸ்.ராஜா செல்லம்

கடைமடையான தமிழகத்தின் நீராதாரத்தை மத்திய, மாநில அரசுகள் எவ்வகையிலும் விட்டுத்தரக் கூடாது என்று தருமபுரியில் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏவும், பாமக தலைவருமான ஜி.கே.மணி இன்று (4-ம் தேதி) தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான நீராதாரமே தமிழகத்துக்கான நீராதாரமாகவும் உள்ளது. மேலும், இந்த நீராதாரத்தைப் பெறுவதில் தமிழகம் எப்போதும் கடைமடையாகவே இருக்கிறது.

கர்நாடக மாநிலம், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் தடுப்பணை ஒன்றைக் கட்டியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தின் நீராதார உரிமை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறுதான் காவிரியாற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் நடவடிக்கை தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லை.

காவிரியாற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை அமைக்க எந்தச் சூழலிலும் அனுமதிக்கக் கூடாது. தமிழக நீராதாரத்தை மத்திய, மாநில அரசுகள் எவ்வகையிலும் விட்டுத்தரக் கூடாது. நம் மாநிலத்துக்குள் காவிரி, பாலாறு, வைகை ஆகிய ஆறுகளின் குறுக்கே 5 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் தடுப்பணைகள் கட்டுவது போன்று மாநிலத்துக்குள்ளேயே நீராதாரங்களைப் பெருக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்விலேயே மாணவர்களின் திறமையும், தகுதியும் அறியப்பட்டு விடுகிறது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு, நீட் தேர்வு தேவையில்லை. தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

கரோனா ஊரடங்கால் வருவாய் பாதித்து, தவிக்கும் மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ளது. இதன் விலையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை அளிக்க வேண்டும். தமிழகத்தில் எத்தனால் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கரும்பு சாகுபடி அதிகரிப்பதுடன், எத்தனால் பொருட்கள் உதவியுடன் வாகனங்களுக்கான எரிபொருட்களின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதும் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு ஜி.கே.மணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, முன்னாள் எம்.பி. பாரிமோகன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT