ஊரடங்கு தளர்வை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் எனபோக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகளில் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கி வருகிறோம். திருப்பதி, பெங்களூரு, புதுச்சேரிக்கு இன்னும் பேருந்து சேவை தொடங்க வில்லை.
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசு உத்தரவுப்படிஅனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை 5-ம் தேதி (நாளை) முதல் தொடங்கப்படுகிறது. அரசுபோக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 19,290 பேருந்துகளில், 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படும். அதன்பிறகு தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து சேவை அதிகரிக்கப்படும்.
வெளியூர் பேருந்துகளைவிட நகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் இருப்பதால், இப்பேருந்துகளை முழு அளவில் இயக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.