மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் அட்டாக் பாண்டி உட்பட 17 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களை 2009-ல் விடுதலை செய்து மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் தாமதப்படுத்தினர். இதனால் அவர்களைக் கைது செய்து, மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை சிறையில் அடைக்க பிடி வாரண்ட் பிறப்பிக்கக் கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அட்டாக் பாண்டியின் கூட்டாளிகளை கைது செய்வதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.
இவர்களில் சரவணமுத்துவை சிபிஐ போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில் மதுரை கே.புதூரைச் சேர்ந்த வி.சுதாகர், கீரைத்துறையைச் சேர்ந்த மாலிக்பாட்சா ஆகியோரை சிபிஐ போலீஸார் நேற்று கைது செய்து, நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன் ஆஜர்படுத்தினர். இருவரையும் மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.