அமமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பி.பழனியப்பன் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன். இவர் கடந்த 2001 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு (மறுசீரமைப்பின் போது பின்னர் அந்த தொகுதி நீக்கப்பட்டுவிட்டது) வெற்றி பெற்றார். 2011-ல் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு பழனியப்பன் வென்றார்.
மேலும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராகவும் இருந்தார். மீண்டும் அதே தொகுதியில் 2016சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகசார்பில் அவர் வெற்றி பெற்றபோதும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதற்கிடையில், அப்போது புதிய அரசு அமைந்த சில மாதங்களில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அதிமுக-வில் பல பரபரப்பான நிகழ்வுகளுக்குப் பிறகுபழனிசாமி முதல்வரானார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அவரையும், டிடிவி.தினகரனையும் அதிமுகவில் இருந்து விலக்கி வைத்தனர். அதனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தினகரன் தொடங்கினார். அப்போது, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட பலரும் அமமுக பக்கம்நின்றனர். பழனியப்பன் அமமுக-வின் தலைமை நிலையச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். அண்மையில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் போட்டியில் தோல்வியைத் தழுவினார். அக்கட்சியில் கடைசியாக துணைப் பொதுச் செயலாளராக இருந்தார்.
அமமுக-வில் இருந்து செந்தில்பாலாஜி, தங்கத் தமிழ்செல்வன், வி.பி.கலைராஜன் போன்றோர் ஏற்கெனவே வெளியேறி திமுகவில் இணைந்துவிட்டனர். பழனியப்பனும் அமமுகவை விட்டு வெளியேறுவார் என தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற பழனியப்பன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் திமுக-வில் இணைந்தார். அமமுகவில் எஞ்சியிருந்த ஒரே முக்கிய பிரமுகரான பழனியப்பனும் தற்போது திமுகவுக்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.