தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை தென்மாவட்டங்களில் நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் வளர்ச்சிக்கான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
புதிய தொழில் தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட ஒற்றைச் சாளர முறை இனிமேல் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை இங்கு நடத்த முதல்வரோடு ஆலோசனை நடத்தி ஏற்பாடு செய்யப்படும்.
2020-21-ம் ஆண்டு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை முன்னிலைப்படுத்தி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப் படும்.
திருநெல்வேலி மாவட்டத்தை மையப்படுத்தி மினி டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தின் முதல் நூற்பாலையான திருநெல்வேலி பேட்டை நூற்பாலை யில் ஆய்வு நடத்தப்பட்டு புதிய தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தடுப்பூசியை தமிழகமே தயாரிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி கோரி அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை அப்படியே உள்ளது. தடுப்பூசி தயாரிப்பு தொடர்பாக மத்திய அரசின் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் மட்டும் நடந்து வருகிறது என்று தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கொற்கையில் கடல்சார் அகழாய்வு
பாளையங்கோட்டையில் உள்ள கோட்டை பகுதியையும், அரசு அருங்காட்சியகத்தையும் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பாளையங்கோட்டையிலுள்ள கோட்டை கொத்தளத்தை பழமை மாறாமல் புதுப்பித்து மரபு சின்ன மாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணி களை கவரும் வகையில் இதை செம்மைப்படுத்தவுள்ளோம். தமிழகத்திலுள்ள மரபு சின்னங் களில் முக்கியமானதாக இது அமையும் வகையில் பணிகளை மேற்கொள்வோம்.
கொற்கையில் கடல்சார் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள கல்மண்டபங்களை பாதுகாப்ப தற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து திட்ட வரையறை செய்ய வுள்ளோம் என்று தெரிவித்தார்.