தமிழகம்

புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்.பி. கண்ணன் அதிமுகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

புதுச்சேரி முன்னாள் காங்கிரஸ் எம்பி கண்ணன், நேற்று அதிமுகவில் இணைந்தார்.

புதுச்சேரி அரசியலில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கண்ணன், காங்கிரஸில் தனது அரசியலை தொடங்கினார். கடந்த 1985-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று சுகாதார மற்றும் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதையடுத்து 1991-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றிபெற அவர் நடத்திய பாதயாத்திரையும் முக்கியமானதாக அமைந்தது. அதே நேரத்தில் கோஷ்டி பூசலால் அவருக்கு முதல்வர் பதவியும் கிடைக்கவில்லை. கடந்த 1996-ல் தமிழகத்தில் மூப்பனார் தொடங்கிய தமாகாவின் புதுச்சேரி மாநில தலைவரானார். அப்போது 6 தொகுதிகளில் வென்றதால், தேர்தலுக்குப் பின்னர் திமுக - தமாகா கூட்டணி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

2000-ம் ஆண்டில் திமுக - தமாகா கூட்டணி உடைந்தது. அதன் பின்னர் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அதே பதவியை தக்க வைத்துக்கொண்டார். அப்போது தேனீ ஜெயக்குமாருக்கும், கண்ண னுக்கும் மோதல் ஏற்பட்டதால் கண்ணன் அமைச்சர் பதவியை இழந்தார். இதனால் 2001-ல் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சியை தொடங்கி, போட்டியிட்டு 4 தொகுதிகளில் அவரது கட்சி வென்றது.

பின்னர் காங்கிரஸுடன் இணைந்து தனது ஆதரவாளர் லட்சுமிநாராயணனுக்கு அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார். தொடர்ந்து 2006-ல் மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, அதிமுக கூட்டணி வைத்து போட்டியிட்டார். அதில் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர். 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியின் வெற்றிக்கு பாடுபட்டார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கியது.

மாநிலங்களவை எம்.பி.யாக கண்ணன் செயல்பட்ட நிலையில் கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டு கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இணைவார் என்ற பேச்சு கடந்த ஆறு மாதங்களாக நீடித்து வந்தது. அவர் எம்பியாக இருந்தபோதே ஜெயலலிதாவை பாராட்டி பேட்டி கொடுத்தார்.

தற்போது சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் கண்ணன் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். அப்போது அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், புதுச்சேரி மாநில செயலாளர் பெ.புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT