சூலூர், காரமடை எனக் கோவை மாவட்டத்தின் புறநகரில் உள்ள 5 பகுதிகளில், கரோனா தொற்றுப் பரவல் குறையாமல் உள்ளதாக புகார்கள் கூறப்படும் நிலையில், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த மே மாதத்தின் இடைப்பட்ட வாரத்திலிருந்து கரோனா தொற்று அதிகரித்தது. தொற்றுப் பரவலைத் தடுக்க மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் சுகாதாரத் துறையினருடன் இணைந்து நோய்த் தடுப்புப் பணிகளை மேற்கொண்டனர். மாவட்டத்தில் தினமும் சராசரியாக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் வசிப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 2.20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று தீவிரமாகி 2,050க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், மாவட்டத்தில் 3,400க்கும் மேற்பட்டோருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகத்தின் தொடர் தடுப்பு நடவடிக்கைகளால், கோவையில் கரோனா தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500க்குக் கீழே உள்ளது. இருப்பினும், மாவட்டத்தின் சில பகுதிகளில் தொற்று குறையவில்லை எனக் கூறப்படுகிறது.
தொற்று குறையவில்லை
இது தொடர்பாகச் சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘‘மாவட்டத்தில், மாநகரப் பகுதிக்கு அடுத்து, புறநகரப் பகுதிகளான சூலூர், துடியலூர், காரமடை, மதுக்கரை, ஆனைமலை ஆகிய பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவல் தற்போதும் அதிக அளவில் உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் தொற்று குறைந்து வந்தாலும், மேற்கண்ட 5 பகுதிகளில் தொற்று குறையும் சதவீதம் குறைவாக உள்ளது. இங்கு தினமும் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 21-ம் தேதி நிலவரப்படி சூலூரில் 9.02 சதவீதம், துடியலூரில் 7.37 சதவீதம், காரமடையில் 4.97 சதவீதம், மதுக்கரையில் 4.75 சதவீதம், ஆனைமலையில் 2.87 சதவீதம் என்ற அளவில் கரோனா தொற்றுப் பரவல் இருந்தது.
இதுவே, கடந்த 2-ம் தேதி நிலவரப்படி சூலூரில் 7.13 சதவீதம், துடியலூரில் 6.92 சதவீதம், காரமடையில் 6.80 சதவீதம், மதுக்கரையில் 5.40 சதவீதம், ஆனைமலையில் 4.19 சதவீதம் என்ற அளவுக்கு கரோனா பரவல் சதவீதம் உள்ளது. 13 நாட்கள் ஆகியும் கரோனா தொற்று குறைவதில் மேற்கண்ட பகுதிகளில் ஜூன் 21-ம் தேதி விகிதத்துக்கும், ஜூலை 2-ம் தேதி விகிதத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. குறிப்பாக, மாநகரில் பாதியைக் கொண்ட துடியலூர், காரமடை, ஆனைமலைப் பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்படுவோர் சதவீதம் 2-ம் தேதி நிலவரத்தை ஒப்பிடும்போது, தற்போது அதிகரித்துள்ளது தெரியும். இப்பகுதிகளில் தொற்றுப் பரவலைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாகச் சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘துடியலூர், மதுக்கரை போன்றவை மாநகர எல்லையை ஒட்டிய பகுதிகள். துடியலூரில் பெரும்பகுதி மாநகரில் உள்ளது. பணி நிமித்தம் உள்ளிட்ட பலவித காரணங்களுக்காக மேற்கண்ட இடங்களிலிருந்து மாநகருக்கும், மாநகரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் சென்று வரும் மக்கள் அதிகம். இதன் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது. கேரள எல்லையில் அமைந்துள்ள மதுக்கரை, சூலூரில் தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன.
இங்கு ஒரே ஆலையில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணியாற்றும் நிலையும் உள்ளது. கேரளாவிலிருந்து தினமும் பணிக்காக வந்து செல்பவர்களும் அதிகம். இங்கு ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலும், விரைவாக அனைவருக்கும் பரவி விடுகிறது. அவர்களால், மக்களுக்கும் பரவி விடுகிறது. ஆனைமலையிலும் மக்கள் நெருக்கம் உள்ளது. இதுவே அங்கு தொற்று அதிகரிக்கக் காரணமாகும். இருந்தாலும், கடந்த சில நாட்களாக மேற்கண்ட பகுதிகளில் தொற்றுப் பரவல் விகிதாச்சாரம் குறைந்து வருகிறது’’ என்று தெரிவித்தனர்.
தடுப்பு நடவடிக்கை தீவிரம்
இதுபற்றிக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என உள்ளாட்சி அமைப்புகள் குழுவின் மூலம் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.
சூலூர், துடியலூர், காரமடை, மதுக்கரை, ஆனைமலை பகுதிகளில் தொற்றுப் பரவலைக் குறைக்க, வீடு வீடாகக் காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா எனத் தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுகிறது. கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பும் இப்பகுதியில் செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.