சுவாமிமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட 2,522 கிராம் தங்க நகைகள் மாயமான வழக்கை கும்பகோணம் டிஎஸ்பி விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் சார்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''சுவாமிமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் தற்போதைய நிர்வாகக் குழுவுக்கு முன்பு பதவி வகித்த நிர்வாகக் குழுவினர் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளனர். விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. அடமானம் பெற்ற ஏராளமான நகைகள் மாயமாகியுள்ளன. தற்போது நகை அடமானம் வைத்தவர்கள் நகைகளைத் திரும்பக் கேட்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் முந்தைய நிர்வாகக் குழு பதவிக் காலத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பது தணிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வருவாய் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் சங்க வைப்பறையின் பூட்டை உடைத்து உள்ளே இருக்கும் அடமான நகைகள், பணம் இருப்பு விவரங்கள், மாயமான நகைகளின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''572 பேர் நகைக் கடன் பெற்றுள்ளனர். இதில் 528 பேரின் நகைகள் மட்டுமே உள்ளன. 44 பேர் அடமானம் வைத்த 2,522.200 கிராம் நகைகள் இல்லை. இதுகுறித்து சுவாமிமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடகு வைத்த 572 பேரில் 250 பேர் நகை திருப்ப முன்வந்துள்ளனர். இவர்களில், 242 பேரின் நகைகள் மட்டுமே தற்போது உள்ளன. 8 பேரின் நகைகள் இல்லை'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''நகைக் கடனைத் திரும்பப் பெறத் தயாராக உள்ள 242 பேரிடம் உரிய பணத்தை வாங்கிக்கொண்டு நகைகளைத் திரும்ப வழங்கலாம். மீதமுள்ள அடமானதாரர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயமான 44 பேரின் நகைகளைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பது குறித்து எஸ்.பி.யிடம் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிமலை காவல் ஆய்வாளர் விசாரித்து வரும் நகைத் திருட்டு வழக்கை கும்பகோணம் டிஎஸ்பி விசாரிக்க வேண்டும். இந்த விசாரணையை எஸ்.பி. கண்காணிக்க வேண்டும். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து எஸ்.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று கூறி விசாரணையை ஜூலை 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.